Monday, January 31, 2011

தீராக் கடன் !

என் பிறப்பின் ரகசியமே !

தன் படைப்பை ரசித்திட
குனிந்து குனிந்தே
விழுந்த கூனே !

எனக்கு நடை பழக்கிட
வளைந்த முதுகே!

என் சிரிப்பிற்கு
ஓயாது சம்பாதித்து
தள்ளாடும் கால்களே !

தீண்ட நினைத்து
நீண்ட கைகளின் நடுக்கமே!

இருமி இருமி
காலனை விரட்டும்
கடைசி முயற்சியே!

தன்பிள்ளை நம்பாது
கைத்தடி நம்பி
அங்குலம் அங்குலமாய்
நகர்கின்ற காலமே!

எனைப் போர்த்திய தோலின் சுருக்கமே....!
என் எதிர்கால உருவே...!

உன்னிடம் நான் பட்ட நன்றிக்கடன்
அடைப்பது எப்போது,
நீ எனக்கு செய்ததை
நானென் பிள்ளைக்கு செய்திட
ஓடுகிற வாழ்க்கையில்...!

~2004~

நீயன்றி....!





காத்திருப்பின் நொடிமுள்ளில்
காலிடறி வீழ்ந்ததுவும்

சுவாச இடைவெளியின்
நீளங்கள் அளந்ததுவும்

காரியக் கவனத்தில்
மறதியை நுழைத்ததுவும்

சினத்தில் சுற்றமிருக்க - எனை
சிரிக்க வைத்ததுவும்

தாய்மொழி பயன்பாட்டில்
பிழைகள் இழைத்ததுவும்

ஊரே களித்திருக்க
தனிமைக்கு அழைத்ததுவும்

அக்றிணைகள் அனைத்துடனும்
உரையாட உந்தியதும்

அப்பாவி பெயரொழித்து
அடப்பாவி அளித்ததுவும்

புவியீர்ப்பு விசைமீறி
மிதக்க விட்டதுவும்

நின் நினைவன்றி நினைவன்றி
நிச்சயமாய் வேறென்ன..?

~2008~

Sunday, January 23, 2011

...அனுமதி இலவசம் !...


பூட்டிதான் இருக்கும்
புன்னகையால் திற

பெரிகார்டியம் மெல்லியது
கிழித்து உள்ளே வா

தமனியில் தங்கு
சிரையில் சிறைபடு

அறைகள் நான்கு உண்டு
வசதியாக வாழ்

வெண்ட்ரிக்கிளில் விளையாடு
ஆரிக்கிளில் இளைப்பாறு

உள்ளே வரும் குருதியில்
நீ குளித்து
அதை சுத்தமாக்கி வெளியேற்று

உட்சுவரில் சாய்ந்து கொள்
உயிர் வாழ உதவு

வாடுமென் உயிருக்கு
வசந்தம் வரவழை

சுருங்கி விரியும் - அதையுன்
சுவாசத்தால் சுத்திகரி

லப்டப் சத்தத்தை
லாவகமாய் சங்கீதமாக்கு

அன்பின் சின்னம்
அழியாமல் காப்பாற்று

நோய்வந்து தாக்குமுன்னே
நீவந்து தாக்கு

புதிதாய் குடிபுகுந்து
புத்துணர்ச்சி பரப்பு

விரைந்து வா
வெற்றிடம் நிரப்பு

உனக்காக காத்திருக்கிறது
என் இதயம்.

~2002

Monday, January 10, 2011

... தாகம்! ...



கேப்பைகம்பு கூழுண்டு தென்னையிள நீருண்டு
பனைதரும் பதனியுண்டு எளியநீர் மோருண்டு
பக்கவிளைவு ஏதுமன்றி தாகமது தணிப்பதுண்டு
பிறகேன் 'கோக்' உனக்கு.

ண்ணாடிக்குள் அடைவதில்லை குளிர்பெட்டியில் வசிப்பதில்லை
நடிகர் எவரும்வந்து பரிந்துரை செய்வதில்லை
உள்ளம் அதிகம்கேட்கும் விளம்பரம் ஏதுமில்லை
ஆனாலும் இளநீர் இதம்.

தொட்டாலே குளிரும் குடுவைக்குள் குடியிருக்கும்
வாயுடைத்து திறக்க வாயுவுடன் பொங்கிவரும்
கையில் இருந்தாலே பெருமை பிரதிபலிக்கும்
பட்டால்தான் தெரியும் வலி.

திறந்தவெளி விற்பனையில் சுகாதாரமில்லை என்பர்
சீவிவிற்பவன் குளித்தானோ இல்லையோ என்பர்
அவர்கள்வாங்க காத்திருக்கிறது, என்றோ ஒருநாள்
பாட்டிலில் அடைத்த பானம்.

செயற்கை குளிரூட்டல் கூடவே காற்றடைப்பு
உடலில் விரும்பி சேர்க்கும் வேதிப்பொருள்
விலைக்கு இனிப்புநீர் - இத்தனையும் நிறுத்தும்வரை
தீராமல் தொடரும் தாகம் !.


2003

புதுக்கவிதை கற்றுக்கொள் !



கற்பனையில் மித
மகாகவியாய் எண்ணிக் கொள்
கண்வலிக்க கனவு காண்
ராசியான பேனா திற
அழகாய் எழுத யோசி
யோசித்து யோசித்து ஓய்ந்து போ
மொழிக்கடலில் வார்த்தை தேடு
திக்கித் திக்கி வார்த்தைகள் சேர்
காத்திருந்து களைத்துப் போ
உவமையோடு முட்டி மோது
கலித்தொகை கலந்து பார்
விருத்தங்கள் விசாரி
சிலேடைகள் சிந்தனை செய்
இலக்கணம் உணர்
எதுகை மோனை அமைத்து பார்
எழுதி எழுதி அடி
தலைமுடி பிய்த்துக்கொள்
ஒருவரி எழுதி
மறுவரி முயன்று பார்
இரண்டையும் அழித்து விட்டு
மூன்றாவதாய் யோசி
களைத்துப் போய் மேஜைமேல்
கவிழ்ந் துறங்கு
நடுஇரவில் பதறி யெழு
நிலவுடன் சிநேகம் கொள்
வார்த்தையோடு மீண்டும் போர்துவங்கு
தாடியிருப்பின் சொரிந்து கொள்
காகிதங்கள் கசக்கி யெறி
பேனா முனை உடை..
ஒருவரியேனும் கவிதை எழுது.

~௨00௨~