Monday, March 7, 2011

இல்லம் !


ந்திரனில் வாழலாம்
ஆக்ஸிஜன் இல்லை யென்கிறார்கள்

செவ்வாய்க்குப் போகலாமென்றால்
தண்ணீரின் தடமே இல்லை அங்கு.

அமெரிக்கா வாசத்தில்
பின்லேடன் பயம் உண்டு.

சரி, சீனாவோ ஜப்பானோ
இடம்மாறி விடலா மென்றால்
எது மனிதன் எது எந்திரம்
அடையாளம் தெரியாது, வேண்டாம்

இலங்கையில் இருக்கும் எண்ணமிருந்தால்
இப்பொழுதே கைவிடு
மண்ணின் மைந்தர்களுக்கே
அங்கே இடமில்லையாம்

என்ன சொன்னாய்..?
பாகிஸ்தான் போகலாமா.....?
வாழும்போதே நரகம் காணும்
உத்தேசம் இல்லை எனக்கு.

வேறெங்கு வசிக்க…?

**@**

மும்பைக்கோ டெல்லிக்கோ
மொத்தமாய் போய்விடலாம்தான்,
பாவம் அவர்களுக்கு தமிழ் தெரியாதாம்

ஓட்டலில் அறையெடுத்து
வாழ்நாள் முழுதும்
வசதியாக வாழலாமென்றால்….,

காரமே இல்லாமலும்
உப்பை அள்ளி கொட்டியும்
நீ வைக்கும் குழம்புக்கு
அங்கே எந்த உணவும் ஈடாகாது.

தலைக்கு மேலும் சொந்தமில்லை
காலுக்கு கீழும் உரிமையில்லை
அந்தரத்தில் வாழும் வாழ்க்கை
அபார்ட்மென்ட்ஸ் வேண்டாம் நமக்கு

எங்குதான் வாழ...?!

**@**

ணியடிக்க அனுமதி கேட்டு
தண்ணீர் வரக் காத்திருந்து
கடன் வாங்கி வெள்ளையடித்து
கால் நீட்டவும் இடமின்றி….

இருக்கின்ற வாடகை வீட்டிலேயே
பெருச்சாளித் தொல்லையோடு
பெருவாழ்வு வாழ்ந்திடுவோம்

என் சம்பளம் இவ்வளவுதான்
அதற்குள்ளே வாழலாம் வாடி...!

~2008~

No comments: